அமெரிக்காவின் 50% வரி விதிப்பால் ஏற்றுமதி பாதிப்பு - புரட்சித்தாய் சின்னம்மா அறிக்கை

எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவின் 50 சதவிகித வரிவிதிப்பால் தமிழகத்தில் பாதிப்புக்குள்ளாகும் லட்சக்கணக்கான தொழிலாளர்களை காப்பாற்றிட தேவையான நடவடிக்கைகளை விரைந்ருது எடுத்திட மத்திய, மாநில அரசுகளுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் 50 சதவிகித வரிவிதிப்பால் தமிழகத்தில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் பெருமளவில் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 30 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது - இந்த அசாதாரண சூழ்நிலையில் பாதிப்புக்குள்ளாகும் தொழிலாளர்களை காப்பாற்றிட தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுத்திட மத்திய மாநில அரசுகள் முன் வர வேண்டும் என புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் பின்னலாடை வர்த்தகம் மற்றும் தமிழகத்திலிருந்து ஏற்றுமதியாகும் இந்திய நகைகள், ரத்தினங்கள், வாகன உதிரிபாகங்கள் ஏற்றுமதி, இறால் மற்றும் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி உள்ளிட்ட பல வர்த்தகங்கள் பெரும் பின்னடைவைச் சந்திக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக புரட்சித்தாய் சின்னம்மா கவலை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த 50 சதவிகித வரிவிதிப்பால், இந்திய ஏற்றுமதியாளர்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர் - அதிலும் குறிப்பாக, அமெரிக்க சந்தையை மையமாக வைத்து இயங்கி வரும் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் பெரும் பொருளாதார இழப்பைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக புரட்சித்தாய் சின்னம்மா வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். 

இந்தியாவின் பின்னலாடை உற்பத்தியின் தலைநகரம் என்று அழைக்கப்படும் திருப்பூரில் இருந்து ஆண்டுக்கு சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்று வருகிறது- இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் 68 சதவிகித பின்னலாடைகள் திருப்பூரில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன- குறிப்பாக ஏற்றுமதியில் சுமார் 30 சதவிகித பின்னலாடைகள் திருப்பூரில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்காவின் இந்த 50 சதவிகித வரிவிதிப்பால் ஆடைகள் உற்பத்தி பாதியாக குறைவதுடன், திருப்பூரின் ஏற்றுமதி கடுமையான சரிவைச் சந்திக்கும் - மேலும் இத்தொழிலை நம்பியுள்ள 2 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் அதிலும் குறிப்பாக பெரும்பாலான பெண் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கவலை தெரிவித்துள்ளார். 

இது, திருப்பூர் பின்னலாடைத் துறையை மட்டும் பாதிக்காது; ஒட்டுமொத்த மாவட்டத்தின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பையும் கேள்விக்குறியாக்கிவிடும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

அதேபோன்று விலை உயர்ந்த இரத்தின கற்கள் மற்றும் ஆபரணங்கள் போன்றவற்றின் மூலம் சுமார் 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்படும் என்றும், இதன் காரணமாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 1.5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது - மேலும், வாகன உதிரிபாகங்கள் ஏற்றுமதி பொறுத்தவரை ஆண்டுக்கு 8 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றுவரும் நிலையில் சுமார் 2 ஆயிரத்து 600 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என்றும், இதனால் ஒரு லட்சத்து 70 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக தெரிய வருவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

பொறியியல் சார்ந்த உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்கின்ற சிறு குறு நிறுவனங்களில் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது - அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கின்ற தோல் பதனிடும் தொழில் நிறுவனங்களில் கிட்டத்தட்ட 4 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர் - இந்நிறுவனங்களில் ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்துவரும் நிலையில் தற்போது 4 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என சொல்லப்படுகிறது- அதே போன்று, இறால் மற்றும் கடல் உணவு பொருட்கள் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யும் நிலையில் இதில் பணியாற்றுகின்ற ஒன்றரை லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது என்றும் புரட்சித்தாய் சின்னம்மா வேதனை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 50 சதவிகித வரிவிதிப்பால் தொழிலாளர்கள் வேலை இழப்பதும், தாக்குப்பிடிக்க இயலாத தொழிற்சாலைகள் மூடப்படுவதும், தொழில் பின்னடைவு காரணமாக வரி வசூல் பாதிப்பும், வங்கிகளில் வாரா கடன்கள் அதிகரிப்பது போன்ற இதுதொடர்பான பல்வேறு பாதிப்புகள் நிகழும் அபாயம் உள்ளதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 50 சதவிகித வரிவிதிப்பால் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியாளர்களில் அதிகமானோர் தமிழகத்தை சார்ந்த ஏற்றுமதியாளர்கள் என்பதாலும் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களை பாதுகாக்கும் விதமாக மத்திய அரசு உதவி திட்டத்தை தீட்டி போர்க்கால அடிப்படையில் விரைந்து நடைமுறைபடுத்த வேண்டும் என கேட்டுக்கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து  ஏற்றுமதியாளர்களின் நெருக்கடிகளை தீர்க்க வங்கிகளில் வட்டியில்லா கடன் வழங்க முன் வர வேண்டும் - குறிப்பாக ஏற்றுமதி மதிப்பிற்கேற்ப 30 முதல் 40 சதவீதம் அளவிற்கு உதவிகளை செய்திட தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொள்வதாக கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, பருத்தி இறக்குமதிக்கு முன்னதாக வழங்கப்பட்ட 11 சதவீதம் வரிவிலக்கு டிசம்பர் 31 வரை என்று காலநிர்ணயம் செய்யாமல் தேவைக்கேற்ப நீட்டிக்கவேண்டும் என்றும் மத்திய அரசைக் கேட்டுக்கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

மேலும், மத்திய அரசு பாதிப்புக்குள்ளான ஏற்றுமதியாளர்களுக்கான உதவி திட்டத்தை நடைமுறைப்படுத்தும்  வரை அவர்களுக்கு கடன் வழங்குவது, கடன் மறுசீரமைப்பு, வட்டி தள்ளுபடி போன்ற உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் - மேலும், தமிழக முதல்வரின் தலைமையில் செயல்படுகின்ற, மாநிலத்தின் அனைத்து நிதி நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பான, மாநில அளவிலான வங்கியாளர்களின் குழுவின் (State Level Banking Committee) மூலமாக பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலமாக பணி மூலதன கடன் (Working Capital Loan) வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.  

தமிழ்நாட்டில் நெருக்கடியான சூழ்நிலையில் சிக்கித்தவிக்கும் தொழில் நிறுவனங்களை காக்க தவறிய திமுக தலைமையிலான அரசு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க பயணம் மேற்கொள்வதால் என்ன பலன் ஏற்படப்போகிறது என்று தெரியவில்லை- 

திமுக தலைமையிலான அரசு ஆண்டுக்காண்டு மின் கட்டணத்தை உயர்த்தி தொழில் நிறுவனங்களுக்கு ஏற்கனேவே தாங்க முடியாத சுமையை கொடுத்து அதனை தாங்கமுடியாமல் பல்வேறு தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிலை செய்யமுடியாமல் தவித்து வரும் நிலையில், அமெரிக்காவின் 50 சதவிகித வரிவிதிப்பால் மேலும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர் - எனவே திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட அமெரிக்கா ஏற்றுமதியாளர்களுக்கு மின் கட்டணத்தை குறைக்க திமுக தலைமையிலான அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.  

மேலும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் தொழிலாளர்களை பணியிலிருந்து நீக்குவதை சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்கள் தவிர்க்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

எனவே, அமெரிக்காவின் 50 சதவிகித வரிவிதிப்பால் தமிழகத்தில் மிகவும் பாதிப்புக்குள்ளாகின்ற அனைத்து ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் இந்த அசாதாரண சூழ்நிலையில் தங்கள் வாழ்வாதாரத்தையே தொலைத்து நிர்கதியாய் நிற்கின்ற 30 லட்சம் தொழிலாளர்கள், அதிலும், குறிப்பாக பின்னலாடை தொழிலில் ஈடுபட்டு வருகின்ற லட்சக்கணக்கான பெண்கள் மிகப்பெரிய அளவில் நேரடியாக பாதிக்கின்ற நிலையில், அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், போர்க்கால அடிப்படையில் உதவிட தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்வதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

Night
Day